தேவனுடைய கரங்களில் ஒரு மனிதன்
முகவுரை 
தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரென்று வேதாகமம் மல்கியா 3:6லும், எபிரேயர் 13:8லும் தெளிவாகக் கூறுகின்றது. அவர் மாறாதவராயிருப்பது போன்று அவர் வார்த்தையும் மாறாததாக இருக்கின்றது. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்?” என்று வேதம் மேலும் நமக்கு எடுத்துரைக்கின்றது. 
ஒவ்வொரு காலத்திலும் - முக்கியமாக இந்த கடைசி காலத்தில் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்த தேவன் கையாண்ட முறைகளை இச்சிறு புத்தகம் விவரிக்கின்றது. 
தீர்க்கதரிசிகளே தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்தும் கருவிகள் என்று வேதம் வெளிப்படையாய் கூறுகின்றது. தேவனுடைய வார்த்தையை முன்னுரைப்பவனே வேதவாக்கியங்களில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசியாவான். தீர்க்கதரிசிகள் தேவனுக்கு பதிலாக பேசினார்கள், தீர்க்கதரிசியின் உத்தியோகம் முக்கியமான ஒன்றாக இருப்பதால், வேதாகமம். “...உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்தி பெறுவீர்கள்” (2 நாளா. 20:20) என்றுரைக்கின்றது. “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என்று ஆமோஸ் 3:7 கூறுகின்றது. 
இச்சிறு புத்தகத்தின் முதலாம் பாகம், கடைசி நாட்களுக்கென்று வாக்குத் தத்தம் செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசியைப் பற்றி உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டுகின்றது. இதன் இரண்டாம் பாகம், தேவனுடைய ஜனத்தை, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மணவாட்டியாக எடுத்துக் கொள்ளப்படுதலில் பங்கு கொள்ள ஆயத்தம் செய்யும் ஒரு மனிதனில் எவ்வாறு இத்தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின என்பதைக் காண்பிக்கின்றது. 
உங்கள் காலத்தில் தேவன் செய்பவைகளின் வெளிப்பாட்டை தேவன் தாமே உங்களுக்கு அருளுவாராக. 
நமது சந்ததிக்கு ஓர் உண்மையான தீர்க்கதரிசி 
(A TRUE PROPHET TO OUR GENERATION)
காலம் பயங்கரமான விதத்தில் தாமதமாகிவிட்டதென்றும், வெகு விரைவில் நமது அன்பர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தமது மணவாட்டியை ஆகாயத்தில் சந்திப்பார் (1 தெச. 4:16-17) என்றும் கருத்துள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் அறிவான். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக, யோவான் ஸ்நானன் இருந்தது போன்று அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக எலியாவின் ஆவியைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசி தோன்ற வேண்டுமென்பதை அநேகர் அறியாமல் இருக்கின்றனர். இப்பொழுதும் கூட இவ்வுலகில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் (மத். 24:11-24) அனேகரை தவறான வழியில் நடத்திச் செல்கின்றனர். கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என்று முன்னுரைத்த அதே தேவன், ஒரு உண்மையான தீர்க்கதரிசி எழும்புவார் என்றும் முன்னுரைத்துள்ளார். 
உலகின் முடிவைக் குறித்து பேசும் மல்கியா 4ம் அதிகாரத்தில் கர்த்தர், “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்” (மல். 4:5-6) என்று கூறியுள்ளார். இரட்டை அர்த்தமுள்ள இவ்வசனம் இரண்டு வெவ்வேறு சமயங்களில் எலியா தோன்றுவார் என்பதைக் குறிக்கின்றது. யோவான் ஸ்நானனைக் குறித்து தேவதூதன், “பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும் (யோவான் ஸ்நானன் மல்கியா 4:6ன் இப்பாகத்தை மாத்திரமே நிறைவேற்றினான்) கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்” (லூக். 1:17) என்றான். 
பிள்ளைகளுடைய இருதயம் பிதாக்களிடத்தில் திருப்பப்படுவதைக் குறித்து தேவதூதன் அப்பொழுது ஒன்றும் கூறவில்லை. ஏனெனில் மல்கியா 4:6ன் அந்த பாகம் யோவான் ஸ்நானனைக் குறித்ததல்ல. 
யோவான் ஸ்நானன் எலியாவென்று இயேசு கூறினார். அது உண்மை (மத் 11:7-14). “நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு, நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்” என்றார் இயேசு (மத். 11:13-14). இப்பொழுது யோவான் 1:19-21 வசனங்களுக்கு உங்கள் வேதாகமத்தைத் திருப்புங்கள்: “எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு நான்: அவர் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.” இது விசித்திரமாயுள்ளது. ஏனெனில் யோவான் ஸ்நானனை இயேசு எலியாவென்று அழைத்திருக்க, யோவான், தான் எலியாவல்ல என்று கூறுகின்றான். 
அப்படியானால் வேதாகமம் முரணான காரியங்களைக் கூறுகின்றதா என்ன? அல்லவே அல்ல. மேசியா தோன்றி, ரோம ஜனங்களை அழித்து, இஸ்ரவேலரை உலகத்தை ஆளும் மக்களாகச் செய்வார் என்று யூதர்கள் எதிர்நோக்கியிருந்தனர் என்பதை நினைவுகூருங்கள். மேசியா வல்லமையுடன் தோன்றுவாரென்றும் அந்த மேசியாவுக்கு முன்னோடியாக எலியா வருவான் என்றும் அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர். எனவே யோவான் ஸ்நானன், “நான் அந்த எலியா அல்ல” என்று கூறுகின்றான். ஏனெனில் அந்த எலியா, “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே” அனுப்பப்பட வேண்டியவராயிருக்கிறார். “அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: கர்த்தருடைய வழியைச் செவ்வை பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்'' (யோவான் 1:22-23). அவன் யாரென்று யோவான் நன்கறிந் திருந்ததன் காரணத்தால், அவனை அவன் ஏசாயா 40:3 உடன் ஒப்பிட்டுக் கொள்கிறான். 
கிறிஸ்துவும் கூட மல்கியா 4:5,6 வசனங்களை எலியாவின் இரண்டு வருகைகளாகப் பிரிக்கிறார். யோவான் ஸ்நானனே எலியாவென்று இயேசு வெளிப்படையாகக் கூறின பின்பும் (மத். 11) சிறிது காலம் கழித்து அவர்களுக்கு மீண்டும் குழப்பமுண்டானது (மத். 11). “அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்... அவர் யோவான் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்து கொண்டார்கள்” (மத். 17:10-13). “எலியா முந்தி வரவேண்டும்” என்று இயேசு 11ம் வசனத்தில் கூறியுள்ளதை கூர்ந்து ஆராயுங்கள். (ஆங்கிலத்தில், "Elias truly shall first come" - அதாவது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவமாக எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). (எதிர்காலம் இலக்கணத்தைக் கவனியுங்கள். அந்த எலியா அப்பொழுது தோன்றவில்லை). “எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான்” (Restore all things). யோவான் ஸ்நானன் எல்லாவற்றையும் சீர்படுத்தினானா? நமது மேன்மையுள்ள கர்த்தரின் வருகைக்கென அவன் உத்தமமான ஜனத்தை ஆயத்தப்படுத்தினானேயன்றி, அவன் எல்லாவற்றையும் சீர்படுத்தவில்லை. ஆனால் இயேசுவோ, இனி வரப்போகும் காலத்தில் எலியா ஒருவன் தோன்றி எல்லாவற்றையும் சீர்படுத்துவான் என்று கூறியுள்ளார். இப்பொழுது அப்போஸ்தலர் 3:19-21 வசனங்களைப் படியுங்கள். பேதுரு இயேசுவைக் குறித்து அங்கு பேசுகின்றான். “... எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் (Restitution of all things) வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்” (21ம் வசனம்). எனவே எல்லாம் சீர்படும்வரை நாம் நேசிக்கும் ஆண்டவர் பரலோகத்திலேயே இருக்க வேண்டும். எலியா எல்லாவற்றையும் சீர் படுத்துவான் என்று இயேசுவே கூறியுள்ளார். 1+1=2 அல்லவா? அப்படியானால் எலியாவின் ஊழியம் அவசியமாகும். 
இயேசு, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே மனுடிகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” (மத் 23:37) என்று கூறினார். நோவாவின் காலத்தில் எப்படியிருந்தது? தேவனுடைய வார்த்தையைக் குறித்து ஜனங்கள் முழுவதும் குருடாயிருந்ததன் விளைவாக, அவர்கள் பொல்லாங்கான கிரியைகளைச் செய்தார்கள். அக்காலத்தில் கர்த்தர் தீர்க்கதிரிசியாகிய ஒரு மனிதனை, “பேழைக்குள் பிரவேசித்து இரட்சிப்படையுங்கள்” என்னும் செய்தியுடன் அனுப்பினார். அவ்வாறே இக்கடைசி நாட்களிலும் ஒரு எலியாவை அவர் அனுப்பாவிடில் சத்தி யமானது நீர்த்து குழப்பமுற்று, அதன் விளைவாக அவர் இப்பூமியை சங்காரத்தால் அடிக்க நேரிடுமென்று தேவன் கூறியுள்ளார். “கிறிஸ்து வுக்குள் பிரவேசித்து இரட்சிப்படையுங்கள்'' என்பதே இந்த எலியாவின் செய்தியாயிருக்கும். வார்த்தைதான் கிறிஸ்து என்பதை நினைவில் கொள் ளுங்கள் (யோவான் 1:1,14; 1 யோவான் 5:7). தேவனுடைய வார்த்தை காலங்கள் தோறும் திரிக்கப்பட்டு புரட்டப்பட்டு அதன் விளைவாக சத்தியமானது இழக்கப்பட்டு தற்காலம் உலகமெங்கிலும் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்தாபனங்கள் தோன்றி, அவர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தையின் சரியான அர்த்தத்தை அவர்களே பெற்றுள்ளதாகக் கூறிக்கொள்கின்றனர். ஆனால் சத்தியம் சீர்படுத்தப்படும் என்று தேவன் வாக்களித்துள்ளார். இதை தான் மல்கியா 4:6 வலியுறுத்துகின்றது. யோவான் ஸ்நானன் பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்குத் திருப்புவான் என்று தேவதூதன் உரைத்தான். இது உரைக்கப்பட்ட பின்னர், யோவான்ஸ்நானன் வைதீக யூத பிதாக்களின் இருதயங்களை இயேசுகிறிஸ்துவின் பேரிலுள்ள புது விசு வாசத்திற்குத் திருப்பினான் என்பதை அவன் செய்த கிரியைகளை மூலம் நாம் அறியலாம். யோவானின் காலத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றினவர்கள் ஆவிக்குரிய பிள்ளைகளாக கருதப்பட்டனர். இப்பிள்ளைகள் ஆவிக்குரிய விதமாய் வளர்ந்து, அப்போஸ்தல பிதாக்களாக மாறினர். சபையை நிர்மாணிப்பதற்கும் புதிய ஏற்பாட்டை எழுதுவதற்கும் தேவன் அவர்களை உபயோகித்தார். ஆனால் இன்றுள்ள சபைகளோ மூல அஸ்திபாரத்தினின்று அகன்று (எபே 2:19-20) தங்களது ஸ்தாபனத்தின் கருத்துக்களுக்கும், மனிதனால் உண்டாக்கப்பட்ட வேத தத்துவத்திற்கும் சென்றுவிட்டன. இதன் விளைவாக சத்தியம் நமது கண்களுக்கு முன்பாக மறைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான தத்துவங்களாலும் லட்சக்கணக்காண கருத்துக்களாலும் ஒடுக்கப்பட்டுவிட்டது. இக்கடைசி காலத்து எலியா “பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்திற்கு” திருப்புவார். அதாவது, அவர் கடைசி காலத்துப் பிள்ளைகளாகிய நமது இருதயங்களை, நமது அப்போஸ்தல முற்பிதாக்களின் விசுவாசத்திற்குத் திருப்பி நமது விசுவாசம், வாழ்க்கை, போதகங்கள் அனைத்தும் அவர்கள் கொண்டிருந்தவைகளுடன் இணையும்படி செய்வார். 
“வெளிப்படுத்தின விசேஷம்” புத்தகத்தின் வாயிலாக இந்த எலியாவை நாம் சுருக்கமாக சித்தரிப்போம். வெளிப்படுத்தின விசேஷம் 2,3 அதிகாரங்களில் இயேசுகிறிஸ்து ஆசியா மைனரிலிருந்த ஏழு புறஜாதி சபைகளுக்கு ஏழு கடிதங்களை எழுதும்படி யோவானிடம் கூறுகின்றார். எழுதப்பட்டுள்ள இந்த சபைகளின் நிலையை நீங்கள் படித்து, அதை சபை வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு கடிதமும் ஒரு தீர்க்கதரிசனமாக அமைந்துள்ளது என்பதைக் கண்டு கொள்கிறீர்கள். இந்த கடிதங்கள் இதுவரை தொடர்ச்சியாக வந்துள்ள ஆறு சபை காலங்களுடன் வெகுவாக பொருந்துகின்றன. இப்பொழுது நாம் ஏழாம் சபையின் காலத்தில், அதாவது லவோதிக்கேயா சபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் (வெளி 3:14-22). ஒவ்வொரு சபைக்கும் ஒரு தூதன் நியமிக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும் (வெளி 1: 16,20; 1, 8,12,18; 3:1,7, 14). “தூதன்” என்னும் சொல் தூதைக் கொண்டு வரும் செய்தியாளன் என்னும் அர்த்தம் பெறுகின்றதேயன்றி அது எப்பொழுதும் பரலோகத்திலுள்ள தேவதூதனைக் குறிப்பதல்ல (கலா 4:14; வெளி 22:8,9). இவை பூமியிலுள்ள புறஜாதி சபைகளுக்கு அளிக்கப்பட்ட செய்தியாயிருப்பதால், இவர்கள் பூமியிலுள்ள தூதுவர்களே. எனவே ஒவ்வொரு சபை காலத்திற்கும் தூதைக் கொண்டு வரும் ஒரு செய்தியாளன் உண்டு. முதலாம் சபை காலமாகிய எபேசு சபையின் காலத்தின் தூதன் அப்போஸ்தலனாகிய பவுலாகும் (வெளி 8:1; அப் 9:15, 13:46-49; ரோமர் 11:13; 15:15-16; கலா 1:11-12; 2:6-8; எபே 3:1-8; 2 தீமோ 1-11). ஏழாம் சபையின் காலத்தைக் குறித்து லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு (செய்தியாளனுக்கு) நீ எழுத வேண்டியது என்னவெனில்...'' (வெளி. 3:14) என்று நாம் வாசிக்கின்றோம். பின்பு இயேசு இக்காலத்தின் பரந்த, ஐசுவரியம் மிகுந்த ஸ்தாபனங்களின் போக்கை கடிந்து கொண்டு, அவர்கள் தரித்திரரும், குருடரும், நிர்வாணிகளுமாயிருந்து, அதை அறியாமலிருக்கிறார்கள் என்று கூறுகின்றார். 20ம் வசனத்தில், கிறிஸ்து தமது சொந்த சபையினின்று வெளியே தள்ளப்பட்டவராய், பசி தாகமுள்ள சில நபர்களை தேவனுடன் கூட செல்லுமாறு அழைப்பதை நாம் காண்கிறோம். ஏழாம் சபையின் காலமே கடைசி காலமாதலால், இயேசுகிறிஸ்து மணவாட்டிக்காக வருவதற்கு முன்பு எலியா எல்லாவற்றையும் சீர்படுத்த வேண்டியிருப்பதால், எலியாவின் ஆவியைக் கொண்ட மனிதனே ஏழாம் சபை காலத்தின் தூதனாக இருக்க வேண்டுமென்று நாம் அறிந்து கொள்ளலாம். எவ்வாறு யோவான் ஸ்நானன் ஒருங்கே தீர்க்கதரிசியும் தூதனுமாக இருந்தானோ (லூக். 7: 24-27), அவ்வாறே இவரும் தீர்க்கதிரிசி தூதனாக இருப்பார். எனவே, வெளி. 3:14-22. எலியாவின் செய்தியின் ஒரு பாகமாக இருக்க வேண்டும். 
இப்பொழுது வெளி. 10:6ஐப் பார்ப்போம்: “தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப் போகிறபோது தேவ ரகசியம் நிறைவேறும்”. இந்த வேத வசனத்தின்படி, ஏழாம் சபை காலத்து தூதன், நமது சிந்தனைகளிலுள்ள எல்லா தளர்ந்த முனைகளையும் சரிபடுத்துவார். நூற்றாண்டுகளாக வேதாகமத்தில் மறைந்து கிடந்த இரகசியங்களை அவர் வெளிப்படுத்தி, தமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு தேவன் அறிவித்த அளவுக்காவது, அவர் தேவரகசியத்தை நிறைவேற்றி முடிப்பார். சணல் வஸ்திரம் தரித்த மனிதன் தானியேலிடம் உரைத்ததுடன் இது பொருந்துகின்றது. “தானி யேலாகிய நீயோவென்றால், முடிவுகாலம் மட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு” (தானி.12:4,8-9). எனவே தானியேலுக்கு அளிக்கப்பட்ட தரிசனம் நமது காலத்தில் வெளிப்பட வேண்டும். “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசியாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்''. (ஆமோஸ் 3:7), எலியா வெளிப்படுத்தும் வேறு சில இரகசியங்கள்: பரிசுத்தவான்கள் மறுரூபமாகுதலின் இரகசியம் (1 கொரி. 15:51-54). சபை கிறிஸ்துவின் மணவாட் டியெனும் இரகசியம் (எபே.5:28-32). தேவத்துவத்தின் இரகசியம் (1 தீமோ .3;16). அக்கிரமத்தின் இரகசியம் (2 தெச.2:6-12). இரகசியம். மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள சகல அருவருப்பு களுக்கும் தாய் (வெளி. 17). 
இக்கடைசி காலத்தின் எலியாவையும் அவருடைய செய்தியையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை நீங்கள் உணரத் தொடங்கி விட்டீர்களா? “தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்கிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்” (மத்.10: 41) என்று, “நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்” (யோவான் 13:20) என்றும் இயேசு கூறினார். இயேசுவில் அன்பு கூருவதாக நீங்கள் கூறிக்கொண்டு, அதே சமயத்தில் இயேசு அனுப்பின தீர்க்கதரிசியை நீங்கள் எவ்வாறு புறக்கணிக்கமுடியும்? அப்படியானால் நீங்கள் அசைந்து கொண்டிருக்கும் நிலத்தின்மேல் நிற்கிறீர்கள் என்று அர்த்தம். மனிதாபிமானம் கொண்ட பரிசேயருக்குள் இருந்த அதே ஆவி உங்களுக்குள் இராதபடி கவனமாய் இருங்கள். அந்த பரிசேயர் தேவன் முந்தைய காலங்களில் செய்ததை விசுவாசித்தார்கள். ஆனால் அவர்கள் கண்களுக்கு முன்பாக தேவன் செய்து வந்ததை அவர்கள் ஏற்க மறுத்தனர். இயேசு சுகமாக்கின குருடனை நிந்தித்து, “நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர், மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம். இவன் எங்கேயிருந்து வந்தானென்று அறியோம்” என்றார்கள் (யோவான் 9:28-29). இந்த மாய்மாலக்காரரை நோக்கி இயேசு, “நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால் என்னையும் விசுவாசிப்பீர்கள், அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே'' (யோவான் 6:46) என்றார். அது போன்று, இயேசு கிறிஸ்துவை நாம் உண்மையாக விசுவாசித்தால், அவரனுப்பின கடைசி கால எலியாவையும் நாம் விசுவாசிப்போம், ஏனெனில் அவரைக் குறித்து இயேசுவே பேசியிருக்கிறார். மேலும் இயேசு பரிசேயரிடம், “அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய (பிதாவினுடைய) வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை'' (யோவான் 5:38) என்று கூறினார். ஓ, கிறிஸ்தவர்களே, நாம் எலியாவை அடையாளம் கண்டுகொள்ளும்போது அவரை நாம் விசுவாசிப்போம். நோவாவின் செய்தியை புறக்கணித்த ஒவ்வொருவரும் வெள்ளத்தினால் அழிக்கப்பட்டார்கள் என்பதை நினைவு கூருங்கள். தேவனுடைய தீர்க்கதரிசியைத் தள்ளி விடுகின்றவர் தேவனையே தள்ளி விடுகின்றனர் (1 சாமு. 8:4-7; யாத். 16:2,8). 
ஆயினும், பெரும்பாலோர் இத்தீர்க்கதரிசி-தூதனைப் புறக்கணிப்பார்கள். ஒவ்வொரு காலத்திலும் அது அவ்விதமாகவே அமைந்து வந்துள்ளது. தீர்க்கதரிசிகளில் பெரும்பாலோர் அவரவர் காலங்களில் பெரும் பான்மையோரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை (மத். 5:11-12; அப்.7:51 -52). நோவாவின் காலத்தில் வாழ்ந்த லட்சக்கணக்கானவர்களில் ஏழு பேர் மாத்திரமே நோவாவுக்கு செவிகொடுத்தனர். இஸ்ரவேல் புத்திரர் தொடர்ச்சியாக மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து கலகம் பண்ணினர். எலியா தன்னுடைய காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்டான். அவன் ஒருவன் மாத்திரமே தேவன் பேரில் அன்புகூர்ந்ததாக அவன் எண்ணியிருந்தான். எரேமியாவை அக்காலத்து ஜனங்கள் எப்பொழுதும் பரிகசித்தனர். இயேசு “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே!...'' (மத். 23:34-37) என்று கூறினார். கடைசிகாலத்து எலியாவைக் குறித்து உரைக்கப்பட்டுள்ள வேதவாக்கியங்கள் அனைத்தும் நிறைவேறும். எனினும், அது மிக எளிமையாகவும், தாழ்மையாகவும் நிறைவேறுவதால், அனேகர் அதைக் காணத் தவறிவிடுவர். (உதாரணமாக, யோவான் ஸ்நானனின் ஊழியத்தைக் குறித்த பிரமிக்கத்தக்க தீர்க்கதரிசனத்தை ஏசாயா 40:3ல் வாசியுங்கள். பின்பு அது எவ்வளவு எளிமையாக நிறைவேறியது என்பதனை மத்தேயு 3:1-12ல் வாசியுங்கள்). 
அப்படியானால் இன்று உலகத்தை மொய்த்துக் கொண்டிருக்கும் கள்ளத்தீர்க்கதரிசிகளின் கூட்டத்தின் மத்தியில் உண்மையான தீர்க்க தரிசி-தூதனை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது? “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று இயேசு கூறினார் (மத்.7:15-20). அவர்களுடைய வரங்களினாலும், அவர்கள் செய்யும் அற்புதங்களினாலுமல்ல. ஏனெனில் அநேகர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தபோதிலும், அவர்கள் அக்கிரமச் செய்கைக்காரராக கருதப்படுவார்கள் (மத். 7:22-23; மாற்.13:22; உபா. 13:1-3). கள்ளத்தீர்க்கதரிசிகள் பார்வைக்கு ஆடுகளைப் போல் இருப்பார்கள் (மத்.7:15). இவர்கள் அநேகரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விரும்பப்பட்டு, பாராட்டப்பட்டு, எல்லோராலும் புகழப்படுபவருமாயிருப்பார்கள் (லூக். 6:26). கள்ளத்தீர்க்கதரிசிகள், அவர்கள் கூறுவதே உண்மையென்று சாதித்து, அனேகரை வழித்தவறச் செய்வது மாத்திரமல்ல, உண்மையில் அவர்கள் உங்கள் பொருளின் மேல் ஆசையுள்ளவர்களாயிருப்பார்கள் (2 பேது. 2:1-3). கள்ளத்தீர்க்க தரிசிகள் பொய்யை உண்மையென நம்பச் செய்வார்கள் (எரே. 28:15). அவர்கள் “சமாதானமாயிருங்கள், உங்கள் ஜீவியம் வார்த்தையுடன் இணைந்தாலும் இணையாமற்போனாலும், நீங்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் பங்கு கொள்வீர்கள்” (எரே. 23:16-17; எசே.13:10) என்று கூறுவார்கள். கள்ளத்தீர்க்கதரிசிகள் “தேவனுடைய சரியான வழிகளைப் புரட்டுவார்கள்.'' அவர்களில் வல்லமை காணப்பட்டாலும், தேவனுடைய தீர்க்கதரிசி கொண்டிருக்கும் வல்லமையுடன் ஒப்பிடும்போது, அது ஒன்றுமற்றதாயிருக்கும் (அப். 13:6-12; யாத். 7:8-12). அவர்களில் வல்லமை இருந்தபோதிலும், அவர்களுடைய வழிகள் வஞ்சிக்கப்படத் தக்கவைகளாக இருக்கும். (எரே. 23:9-32; எசே. 13). கள்ளத்தீர்க்கதரிசிகள் உண்மையான தீர்க்கதரிசியைப்போல் தோற்றமளித்து, கிரியை நடத்துவதால், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே அதைக் கண்டு வஞ்சிக்கப்படாமலிருக்க முடியும். (மத். 24:24; 2 நாளா. 18; எரே. 8). 
முடிவாக ஒரே ஒரு பரிசோதனை மாத்திரம் உண்டு. “கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால் அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணி கரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்பட வேண்டாம்” (உபா. 18: 21-22) என்று தேவன் கூறியுள்ளார். ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே உரைக்கும் யாதொன்றும் நிறைவேறினால், அவரே உண்மையான தீர்க்கதரிசி என்பதை அறிந்துகொள்ளலாம். இக்கடைசிகாலத்து எலியாவிடம், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்னும் தேவனுடைய வார்த்தை உண்டாயிருக்கும். அவர் போதகத்தைக் குறித்து கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறினால், அது வேதவாக்கியங்களுடன் முற்றிலும் பொருந்துகிறதாயிருக்கும். அவ்வாறே அவர், “கர்த்தர் உரைக்கிறது என்னவெனில், இன்னின்ன காரியங்கள் சம்பவிக்கும்” என்று கூறுவாரானால், அவர் கூறியபடியே நிகழும். ஒரு முறையாவது அவர் அவ்வாறு கூறியது பிழையின்றி நிகழவில்லையென்றால், அவர் தீர்க்கதரிசியல்ல. ஏனெனில் ஒவ்வொரு தீர்க்கதரிசியும், “தேவன் உரைக்கிறதாவது'” என்பதைக் கொண்டிருப்பார், தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவற முடியாது. அபிஷேகத்தின் கீழ் ஒரு தீர்க்கதரிசி உரைப்பது அவருடைய சொந்த வார்த்தையல்ல; அவை தேவனுடைய வார்த்தைகளாகும் (1 பேது. 1:20=21). 
யோவான் ஸ்நானனைக் குறித்து இயேசு, “எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்” என்றார் (மத்.17:12-13). கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரும் எலியாவின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் அவன் வந்து போய் விட்ட பின்பும், அவர்கள் அவனைக் கண்டுக் கொள்ளத் தவறினர். அதுப்போல் கடைசி காலத்து எலியா வந்துபோய்விட்ட பின்பும், பெரும்பாலோர் அவரைக் கண்டுகொள்ளத் தவறுவதில் வியப்பு ஏதாகிலும் உண்டோ? இது நம்மை தேவனுடைய சமூகத்தில் முகங்குப்புற விழுந்து அவரிடத்தில் ஊக்கமான ஜெபத்தை ஏறெடுக்கச் செய்ய வேண்டும். ஏனெனில் காலதாமத மாகிவிட்டதென்றும், நமது ஆண்டவரின் வருகை அருகாமை யிலுள்ளதென்றும் நாமறிவோம். இந்த தீர்க்கதரிசி-தூதன் யாரென்று கண்டுகொண்டால் மாத்திரம் இரட்சிப்படைய முடியாது. ஏனெனில் இரட்சிப்பு என்பது இயேசுகிறிஸ்து சிந்தின இரத்தததின் பேரிலுள்ள விசுவாசத்தின் மூலமே கிடைக்கப் பெறும். எனினும், நாம் தீர்க்கதரிசியின் செய்திக்கு செவி கொடுக்க வேண்டியது அவசியமாயுள்ளது. அந்த தீர்க்கதரிசி மனித கோட்பாடுகள், போதகங்கள், பாரம் பரியம், தத்துவம், திட்டம், போதகங்கள் இவைகளுக்கு அப்பாற்பட்ட தூய்மையான இயேசு கிறிஸ்துவினிடம் நம்மைத் திருப்புவார். கிறிஸ்துவின் மணவாட்டி என்னப்படுபவள் கிறிஸ்துவைப் போலவே இருந்து, அவர் கூறுவதையே கூற வேண்டும் (வெளி. 22:17). 
அவளுக்கு எபேசு சபை காலத்திலிருந்து மணவாட்டியிடம் இருந்தது போன்ற “கிறிஸ்துவின் சிந்தை” இருக்கவேண்டும் (1 கொரி 2:19). பவுல் அப்போஸ்தலன், “கிறிஸ்துவும் சபையில் அன்பு கூர்ந்து, தாம் அதைக் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து (கடைசி கால எலியாவும் மணவாட்டிக்கு சுத்தமான வார்த்தையை திரும்பவும் அளிப்பார்) பரிசுத்தமாக்குகிறதற்கும், கரைத்திரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத் தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்று கூறியிருக்கிறான் (எபே.5:25-27) கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு விருப்பமுள்ளது எது, விருப்பமில்லாதது எதுவென்பதை எலியா அளிக்கும் செய்தியின் மூலம் நாம் அறிந்துகொள்வோம். நாம் தேவனுடைய வார்த்தைக்குத் திருப்பப்படுவோம். 
இன்னும் ஓர் கருத்து-தேவதூதன் உரைத்தவண்ணம் யோவான் ஸ்நானன் கர்த்தருக்கென ஜனத்தை ஆயத்தம் பண்ணினான்? ஆனால் அவன் எல்லோரையுமா ஆயத்தம் பண்ணினான். அனேகர் அவன் செய்தியைக் கேட்ட போதிலும், ஒரு சிலர் மாத்திரமே அவன் செய்தியைப் புரிந்துக்கொண்டு தேவனுக்காக ஆயத்தப்பட்டனர். அது போன்று, இக்கடைசி கால எலியாவும் “எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவார்” ஆனால் அது எல்லோருக்குமல்ல. ஒரு சிலர் மாத்திரமே அவர் செய்திக்கு செவிகொடுத்து, கிறிஸ்துவின் பரிபூரணத்திற்குள் வந்து, எடுத்துகொள்ளப்படுதலுக்கென உண்மையாகவே ஆயத்தப்படுவர். “ஒரு சிலர் மாத்திரமா?” என்று கேட்கலாம். “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதை கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்” (மத்.20:16;22:14). நோவாவின் நாட்களில் எட்டு பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். லோத்தின் காலத்தில் மூன்று பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். இவ்விரண்டு சம்பவங்களும் தமது இரண்டாம் வருகைக்கு முன்னடையாளமாயுள்ளனவென்று இயேசு தாமே கூறியுள்ளார் (லூக்.17:26-30). 
எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்ந்த பின்னர், “யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்துக் காலம் வரும்” (தானி.12:1). "இதோ, சூளையைப் போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள். வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்... என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”(மல்.4:1). 
ஆகையால் இனிச் சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்” (லூக். 21:36; 1 பேது. 4:7). பரிசேயர் யோவான் ஸ்நானனைக் கண்டு கொள்ளத் தவறின விதமாக, நீங்களும் அந்த தீர்க்கதரிசி வரும்போது அவரைக் கண்டு கொள்ளத் தவறினால் என்னமாயிருக்கும்? (மத்.17:12-13; 21:23-25). ஒருக்கால் அவர் ஏற்கனவே வந்து போயிருந்தால்? 
“அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே அசட்டைக்காரரே பாருங்கள், பிரமித்து அழிந்து போங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன். ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்க மாட்டீர்கள் என்று சொல்லியிருக் கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்'' (அப்.13:40-41). வேறுவிதமாகக் கூறினால், நீங்கள் அகந்தையுள்ளவர்களாய், உங்கள் வழிகளிலே நிலை கொண்டு, தீர்க்கதரிசியையும் அவருடைய செய்தியையும் குறித்து ஒருவன் உங்களுக்கு விவரித்துச் சொல்லும்போது, அதை ஏற்றுக் கொள்ளாமலிராதபடிக்கு கவனமாயிருங்கள்'' (ரோமர் 10:20-21). 
இது முக்கியம் வாய்ந்த ஒரு நேரமாகும். இது அற்பமான ஓர் விஷயமல்ல. அருமை கிறிஸ்தவனே, பெரோயா பட்டினத்து ஜனங்களைக் குறித்து, “அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் குணசாலிகளாயிருந்தார்கள்' (அப்.17:10-11; 1 தெச. 5:17-21) என்று கூறப்பட்டுள்ளது போல் நீயும் ! இருப்பாயாக என்று உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். O.A.ஜார்கென்ஸன் (தமிழாக்கம் : S.C. ஜேக்கப்) 
தேவன் கட்டளையிட்ட ஒரு தீர்க்கதரிசி
(A GOD ORDAINED PROPHET)
தேவனுடைய வார்த்தையைக் கேளுங்கள்: “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படு முன்னே நான் உன்னைப் பரிசுத்தம் பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரியாகக் கட்டளையிட்டேன்” (எரே.1:5) 
நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் தாமதமாகிவிட்டதா? 
“மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?” (மத்.16:3) என்று இயேசு கேட்டார். காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடுமா? 
உலகின் எல்லா பாகங்களிலுமிருந்தும் யூதர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். நூற்றாண்டுகளாக சிதறப்பட்டு புறஜாதிகளால் துன்புறுத்தப்பட்ட இஸ்ரவேல், 1948 ஆண்டில் ஓர் சுயேச்சை நாடாக ஆகிவிட்டது. இவை யாவும் நிறைவேறு மென்று இயேசு சுமார் 2000 ஆண்டுகட்குமுன்பே, தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். அவ்வமயம் இயேசு, “அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்.21:31-32) என்றுரைத்தார். 
எனவே, காலதாமதாகி விட்டது என்று நாமறிவோம். இயேசு கிறிஸ்து மறுபடியும் வருவதற்கு முன்பு, அவருடைய சபைக்குள் ஒரு புதுப்பித்தல் (Restoration) உண்டாக வேண்டும் (அப்.3:19-21). அது எலியாவின் ஆவியைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசியின் மூலம் (மல்.4:5; மாற்.9:12) நிறைவேறும். அத் தீர்க்கதரிசி பிழையுள்ள காரியங்கள் அனைத்தையும் திருத்தி, ஜனங்களை இயேசுகிறிஸ்துவின் மணவாட்டியாக ஆயத்தப்படுத்துவதற்கென, கடைசி கால சந்ததிக்கு அனுப்பப் படுவார். 
அத்தீர்க்கதரிசி ஏற்கனவே இவ்வுலகில் வந்து போய்விட்டார். அவரைக் குறித்து உரைக்கப்பட்டுள்ள எல்லா வேதவாக்கியங்களும் நிறைவேறிவிட்டன. விரைவில் கிறிஸ்துவின் மணவாட்டி, ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்தில் பங்குகொள்வதற்கென, ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவாள் (வெளி.19:6-9). அப்பொழுது இவ்வுலகில் கைவிடப்பட்டோருக்கு மகா இக்கட்டுக் காலம் உண்டாயிருக்கும் (மத்.24:21, வெளி.6:12,17). 
நான் பேசிக் கொண்டிருக்கும் இம்மனிதன் யார்? இவரே புறஜாதிகளுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கடைசி காலத் தீர்க்கதிரிசியென்று என்னை நம்பச் செய்வது எது? 
உலகம் அவரை சங்கை வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்னும் பெயரால் அறிந்திருந்தது. அவரை நேசித்தவர்கள் அவரை “சகோதரன்” என்றழைத்தனர். அவர் ஒரு தீர்க்கதரிசியா என்பதை நீங்களே நிதானித்துக் கொள்ளுங்கள். தேவன் தமது ஊழியக்காரனை ஒரு அறையிலோ அல்லது அறைவீட்டிற்குள்ளோ நிரூபிக்கவில்லை (மத்.24:23-26; லூக்.11:33). அவர் தீர்க்கதரிசியென்று அற்புதங்களாலும் அடை யாளங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டதை இவ்வுலகம் கண்டது. ஆயினும் அவைகளின் மூலம் அவர் யாரென்பதை அதனால் அறிந்து கொள்ள இயலவில்லை. செய்தித்தாள்களும், வெளியீடுகளும் அவை களைப் பிரகடனம் செய்தன. அவர் தீர்க்கதரிசியென்பதை அறிந்து கொள்ளாமலே அவை அவ்விதம் செய்தன. அவர் யாரென்பதற்கு உலகெங்கிலுமுள்ள லட்சக்கணக்கானோர் சாட்சிகளாகத் திகழ்கின்றனர். ஆயினும் அவர்கள் கண்களுக்கு முன்பாக நிறைவேறினவைகளின் உண்மையான அர்த்தத்தை ஒரு சிலரே புரிந்து கொண்டுள்ளனர். 
அவர் 1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதியன்று கென்டக்கி மலையில், சரிவர கட்டப்படாத ஒரு சிறு வீட்டில் பிறந்தார். அவர் பிறந்தபோது ஒரு வினோத மங்கின ஒளி அவர் மேல் தொங்குவதை அங்கிருந்தவர் கண்டனர் (எரே. 1:4-5). அது சூரிய வெளிச்சம் தோன்று வதற்கு முன்பிருந்த சமயமாயிருந்தது. 
அவருக்கு 3 வயதான போது, ஒரு சப்தம் காட்டிலிருந்து தோன்றி அவரிடம், "நீ நியூ ஆல்பனி என்னுமிடத்தின் அருகில் வாழ்வாய்'' என்று கூறியதாக அவருடைய தாயாரிடம் அவர் கூறினார். இதைக் கேட்ட அவருடைய தாயார் பரிகாசமாக சிரித்தார்கள். ஆனால் ஒரு ஆண்டு கழித்து, அவருடைய குடும்பம் நியூ ஆல்பனி என்னும் இடத் திற்கு சில மைல்கள் தூரத்திலுள்ள இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில் என்னும் இடத்தில் குடியேறினது. 
அவருக்கு ஏழு வயது சென்றபோது, முதன் முதலாக அவர் தரிசனம் ஒன்றைக் கண்டார். ஓஹையோ ஆற்றின் கரையில் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது, சடுதியில் ஒரு பாலம் ஆற்றின் குறுக்கே கட்டப்படுவதைப் போன்ற தரிசனத்தை அவர் கண்டார். அவர் கவனித்துக் கொண்டேயிருந்தபோது, கட்டும் பணியில் அமர்த்தப்பட் டிருந்த 16 பேர் ஆற்றில் விழுந்து மாண்டு போனார்கள். அவ்வாறே 22 ஆண்டுகள் கழித்து, அதேவிடத்தில் ஒரு பாலம் கட்டப்படும்போது, கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த 16 பேர் விழுந்து உயிரிழந்தனர். 
சகோதரன் பிரான்ஹாமின் குடும்பத்தில் கிறிஸ்தவ மதத்தையொட்டிய எவ்வித முறையும் அனுசரிக்கப்படவில்லை. வில்லியம் சிறுவனாக இருந்தபோது, அவர் அனேக இடையூறுக்குள்ளும், தரித்திரத் துக்கும் ஆளானார். ஏனெனில் அவருடைய தகப்பனார் மிதமிஞ்சி மது அருந்துவது வழக்கமாயிருந்தது. மதுவிலக்கு சட்டம் அமுலில் இருந்தபோது, அவருடைய தகப்பனார் மதுவை கள்ளத்தனமாக காய்ச்சி விற்று வந்தார். ஒரு சமயம் அவர் தமது மகனை சாராயம் காய்ச்சும் ஸ்தலத்திற்கு தண்ணீரைத் தூக்கிக் கொண்டு வரச் செய்தார். வில்லியம் அப்பொழுது புன்னை மரம் ஒன்றைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, காற்றடிக்கும் சப்தம் போன்ற ஒரு சத்தத்தைக் கேட்டார். அது அமைதி நிலவும் ஒரு நாளாக இருந்தபடியால், அச்சத்தம் அவரைக் கலங்கச் செய்தது. அவர் மேலே நோக்கிய போது, சுழல் காற்று ஒன்றினைக் கண்டார். அச் சுழல்காற்றினின்று ஒரு சத்தம் உண்டாகி (யோபு 38:1ல் கூறப்பட்டுள்ளது போன்று). “மது அருந்தாதே, புகை பிடிக்காதே, எவ்விதத்திலும் உன் சரீரத்தை தீட்டுப்படுத்தாதே, ஏனெனில் நீ பெரிய வனாகும்போது, நீ செய்வதற்கென்று ஒரு பணி உனக்கு உண்டாயிருக்கும்” என்றுரைத்தது. 
அனேக ஆண்டுகள் கழிந்தன. அவருடைய தகப்பனார், அவர் மது அருந்த மறுக்கும் காரணத்தால், அவரை “பெண் தன்மையுள்ளவன்” என்று சதா அழைப்பார். ஒரு நாள் அவர் ஆண்மைத்தனம் கொண்டவர் என்று நிரூபிக்க வேண்டுமென்று தீர்மானித்தவராய் ஒரு விஸ்கி குப்பியை தன் உதடுகளின் அருகில் கொண்டு சென்ற போது, சுழல் காற்றிலிருந்து உண்டான அந்த சத்தத்தை அவர் மறுபடியும் கேட்டார். அவருக்குப் பயம் உண்டானது. அவர் குப்பியை கீழே வைத்துவிட்டு ஓடிவிட்டார். அவ்வாறே அனேக ஆண்டுகட்குப் பின்னர், அவருடைய நண்பர்கள், அவர் புகைபிடிக்க மறுத்ததன் காரணத்தால், அவரைப் “பெண் தன்மையுள்ளவர்” என்று அழைத்தபோது, அவர் கோபமூண்டு ஒரு சிகரெட்டைக் கையிலெடுத்தார். அப்பொழுதும் சுழல் காற்றினின்று தோன்றிய அதே சத்தம் அவரைத் தடுத்து நிறுத்தினது. 
இத்தகைய அனுபவங்கள் அவரது வாழ்க்கையில் நேர்ந்த போதிலும் அவர் தேவனை அறியாத பாவியாகவே இருந்து வந்தார் (ரோமர் 11:29). அவருக்கு சுமார் 20 வயதான போது, வாயு உற்பத்தி செய்யும் நிர்வாகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம், அளவிற்கு மீறிய வாயு அவரை மூச்சுத் திணறச் செய்து, அதன் விளைவாக அவர் மிக நோய்வாய்ப்பட்டார். அவருக்கு இரணசிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் வைத்திய சாலையில் மரணத் தருவாயில் கிடத்தப்பட்டிருந்த போது, அவருக்கு ஒரு தரிசனம் உன்டானது. அத்தரிசனத்தில் அவர் ஒரு காட்டில் நின்று கொண்டிருந்தார். காற்று இலைகளை அசைக்கும் போது உண்டாகும் சத்தத்தைப் போன்ற ஒரு சத்தம் தூரத்தில் உண்டானதை அவர் கேட்டார். அந்த இலைகளின் சத்தம் அவரருகாமையில் வருவது போன்று அவர் உணர்ந்தார். அவருடைய மரணநேரம் நெருங்கி விட்டது என்று நினைத்தார். அந்த சத்தம் அவரிடம், “மது அருந்தாதே, புகை பிடிக்காதே, எவ்விதத்திலும் உன் சரீரத்தை தீட்டுப்படுத்தாதே நான் உன்னை அழைக்கிறேன். நீ வர மறுக்கிறாய்” (யோனா 1:1 - 3 கூறுவது போல்) என்றுரைத்தது. வில்லியம், “ஆண்டவரே, அது நீரேயானால் நான் மறுபடியும் பூமிக்குத் திரும்பிச் செல்ல அனுமதியும். நான் கூரைகளின் மேலிருந்தும் தெரு முனைகளில் நின்று கொண்டும் உமது சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன்” என்று வாக்கு கொடுத்தார். அந்த தரிசனம் அவரை விட்டு மறைந்தது. வில்லியம் அற்புத சுகம் பெற்றார். 
அவர் அளித்த வாக்கை நிறைவேற்ற எண்ணி, அவர் புறப்பட்டுச் சென்றார். ஆயினும் தேவனை எவ்வாறு கண்டு கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து அவர் சற்றேனும் அறிந்திருக்கவில்லை. தேவன் இயற்கையில் வாசம் செய்கிறார் என்பதை உணர்ந்தவராய் அவர் தேவனுக்கு குறிப்பு ஒன்றை எழுதி, தேவன் அதைப்படிக்க வேண்டு மென்று கருதி, மரத்தில் தொங்கவிட்டார். அதனால் பலன் ஏதுமில்லை என்பதைக் கண்டவுடன், அவர் மரக்கொட்டகை ஒன்றில் பிரவேசித்து, தன் பாவங்களுக்காக கதறியழுது, “ஆண்டவரே, நான் எதற்கும் உதவாதவன், எனக்கு உதவி செய்யும்” என்று ஜெபித்தார். அப்பொழுது அவர் முன்னிலையில் சிலுவை வடிவில் ஒரு ஒளி தோன்றியது. சிலுவையில் சிந்தப்பட்ட இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமே அவருக்கு பாவ மன்னிப்பு உண்டு என்று அவர் உணர்ந்த போது, இரட்சிப்பின் சந்தோலும் அவரது உள்ளத்தில் பொங்கி வழிந்தது. 
அவருடைய வாழ்க்கையில் வினோத அழைப்பு ஒன்றுண்டு பார்பதை அவர் உணர்ந்த காரணத்தால், அவர் ஊழியத்தில் பிரவேசித்தார். 1933ம் ஆண்டு ஜுன் மாதம் 11ம் தேதியன்று - அது ஒரு வெப்பம் மிகுந்த நாளாயிருந்தது. அன்றுதான் அவர் முதன் முறையாக எழுப்புதல் கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு ஓஹையோ ஆற்றில் 130 நபர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க சென்றார். அவர் 17ம் நபருக்கு ஞானஸ்நானம் கொடுக்க ஆயத்தமாகும் சமயத்தில், அவருக்கு மேல் பிரகாசமான ஒளி ஆகாயத்தில் தோன்றினது. (அப்.9:1-7ல் கூறப்பட்ட விதமாய்) அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் அவரிடம், “இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு யோவான் ஸ்நானன் முன்னோடியாக அனுப்பப்பட்டது போன்று அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக நீ அனுப்பப்பட்டிருக்கிறாய்” என்று விளம்பினது. அங்கு குழுமியிருந்த 4000 பேர் வியப்படைந்து, திகில் கொண்டனர். இச்சம்பவத்திற்கு அவர்கள் யாவரும் சாட்சிகளாயுள்ளனர். 
சகோதரன் பிரான்ஹாமும் கூட அதன் அர்த்தத்தை அப்பொழுது புரிந்து கொள்ளவில்லை. அவருடைய வினோதமான வாழ்க்கையைக் குறித்தும் அவர் அப்பொழுது ஒன்றும் உணரவில்லை. அவருக்கு அறிமுகமாயிருந்த போதகர் அனைவரும், இத்தகைய தரிசனங்கள் பிசாசினால் உண்டானவை என்று அவரிடம் கூறினர். எனினும், அவர் வருங்காலத்தைக் குறித்து கண்ட தரிசனங்கள் ஒரு போதும் தவறாமல் அவர் கண்ட விதமாக அப்படியே நிறைவேறின. இச்சம்பவங்கள் தேவனுடைய பிள்ளைகளுக்கு உதவியாயிருந்து, தேவனுக்கு மகிமையைச் செலுத்த ஏதுவாயிருந்தன. இதைக் குறித்து ஏற்கனவே குழப்பத் திலிருந்தவர்களை இன்னும் அதிக குழப்பத்தில் ஆழ்த்த, சகோதரன் பிரான்ஹாம் பிசாசு பிடித்த நபர் அல்லது ஜோதிடர், குறி சொல்பவர் இவர்களைச் சந்திக்க நேர்ந்தபோது, அவர்கள் அவரிடம், ஒரு ஒளி அவரை பின்பற்றுவதை அவர்கள் கண்டதாகவும், அவர் ஒரு அடை யாளத்தின் கீழ் பிறந்தவரென்றும், அவரிடம் தெய்வீக வரம் குடி கொண்டுள்ளது என்றும் கூறுவதுண்டு. இத்தகைய சம்பவங்கள் சகோதரன் பிரான்ஹாமையே கலங்கச் செய்தன. 
1946ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதியன்று அவர் வேலைக்குப் பிறகு வீடு திரும்பும் சமயம், ஒரு பலமுள்ள காற்று மரத்தின் உச்சியி லிருந்து புறப்பட்டுவந்து, அவரைக் கீழே தள்ளிவிடும் அளவுக்கு அவர் மீது மோதியது. இது அவரை தடுமாறச் செய்தது. அவர் மனைவியிடம், “இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும், என் ஊழியத்தைக் குறித்தும் என்னைக் குறித்தும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. நான் இவ்விதம் தொடர்ந்து சென்று கொண்டிருக்க முடியாது. அன்பே, இது தேவனால் உண்டானதுதானா? நான் காட்டிற்குச் சென்று, என் வேதாகமத்தையும் ஜெபத்தையும் கொண்டு தேவனைத் தேடி, இதன் உண்மையைக் கண்டுபிடிக்கப் போகிறேன். இல்லையென்றால், நான் திரும்பி வரவே மாட்டேன்'' என்றார். 
காட்டிலிருந்த ஒரு குகைக்குள் சென்று, முகங்குப்புற விழுந்து, முழு இருதயத்தோடும் அவர் தேவனை நோக்கிக் கதறினார். அன்றிரவு சுமார் 11 மணியளவில், ஒளிமிக்க ஓர் நட்சத்திரம் அந்த குகையை பிரகாசத்தினால் நிரப்பியது. இதைக்கண்ட வில்லியமின் இருதயம் பீதி கொண்டது. அவர் காலடி ஓசை கேட்டார். அப்பொழுது வெண் வஸ்திரம் தரித்த ஒருவர் அந்த ஒளியினின்று புறப்பட்டு வந்து, “பயப் படாதே, உன்னுடைய விசித்திரமான வாழ்க்கையும், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட உன் வழிகளும், தெய்வீக சுகமளிக்கும் வரத்தை நீ உலகிலுள்ள மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறிவிக்கின்றன என்று உனக்கு அறிவிக்கவே நான் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சமுகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறேன். நீ மாத்திரம் உத்தமனாயிருந்து, ஜனங்கள் உன்னை நம்பச் செய்யக் கூடுமானால், உன் ஜெபத்தின் முன்னால் எதுவும் புற்றுநோயும் கூட நிற்க முடியாது'' என்றார். அரை மணி நேரம் அத்தூதன் அவருடைய கடந்த கால வாழ்க்கைக்கு விளக்கம் அளித்து, அவருடைய எதிர் காலத்தில் என்ன நிகழவிருக்கிறது என்பதையும் எடுத்துக் கூறினார் (ஆதி. 16:7-12; யாத். 3:2-14; நியா. 6:11-23; சகரி 4:5; மத். 16:2-7; லூக். 1:11-38; அப்.5:19-20 உள்ளவைகளில் போன்று). வில்லியமின் வாழ்க்கையில் காணப்பட்ட தேவனுடைய வரத்தைக் குறித்து போத கர்கள் உணர்ந்து கொள்ள முடியாமலிருக்க, அதே சமயத்தில் பிசாசு எவ்வாறு அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டான் என்பதைக் குறித்தும் அத்தூதன் விளக்கம் தெரிவித்தார். இயேசுவின் காலத்திலும் அவ்வாறே இருந்தது. அவர் காலத்திலிருந்த மதத் தலைவர்கள் அவர் பிசாசு பிடித்தவர் என்றனர் (மாற் 3:22; யோவான் 7:20, 8:48-52, 10:20). ஆனால் அதே சமயத்தில், அவர் தேவனுடைய பரிசுத்தர் என பிசாசுகள் அறிக்கையிட்டன (லூக். 4:33-35, 40-41, 8:27-28; மாற்: 1:23-24, 3:11). தூதன் சகோதரன் பிரான்ஹாமிடம், எவ்வாறு மோசேக்கு அவர் தேவனால் அனுப்பப்பட்டான் என்பதன் நிரூபனமாக இரண்டு வரங்கள் அளிக்கப்பட்டதோ (யாத். 4:1-8), அவ்வாறே அவருக்கும் இரு வரங்கள் அளிக்கப்படும் என்றார். முதலாவதாக, வியாதிகள் உண்டாக்கும் துடிப்புகளின் (Vibrations) மூலம், அது என்ன வியாதி என்பதை அவர் அறிந்து கொள்வாரென்றும், அவ்வியாதிகள் அவருடைய கையில் ஒரு வீக்கத்தை உண்டாக்குமென்றும் கூறினார். அவர் ஜெபம் ஏறெடுத்த மாத்திரத்தில் அவ்வீக்கம் மறைந்து போகுமென்றால், அவர், “கர்த்தர் உரைக்கிறதாவது, நீ சுகம் பெற்றாய்'” என்று கூற வேண்டுமென்றும் தூதன் கூறினார். சகோதரன் பிரான்ஹாம் மக்களின் இருதயங்களிலுள்ள இரகசியங்களை அறிந்து கொள்ளும் சமயம் வரும் என்றும் அத்தூதன் கூறினார். 
தூதன் சொன்னபடியே நிறைவேறின என்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் சாட்சிகளாயிருக்கின்றனர் (அப். 27: 21-25 போன்று). அவருடைய கையிலும் அடையாளம் தென்பட்டு, அது என்ன வியாதி யென்று அவர் கூறினவுடனே, ஜனங்கள் சுகமடைவதற்கு ஏதுவாக அவர்களுடைய விசுவாசத்தை அது அதிகரித்தது. அவருடைய ஊழியம் முதலில் அமெரிக்கா முழுவதும் பரவி, முடிவில் உலகம் முழுவதும் பரவினது. பின்னர், கிறிஸ்துவின் ஆவி ஜனங்களுடைய இருதயங்களில் மறைந்து கிடந்த அந்தரங்க சிந்தனைகளை அவருக்கு வெளிப்படுத்திக் கொடுக்கும் கட்டம் வந்தது. (ஆதி. 18:9-15, 2 ராஜா 6:8-12; யோவான் 4:17-19 போன்று) ... ஜனங்களின் தேவைகள் எவையென்று வெளிப்படுத்தல்; இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்படாத, அறிக்கையிடப்படாத பாவங்களை வெளிப்படுத்தல்; சகோதரன் பிரான்ஹாம் அறிந்து கொள்வதற்கு ஏதுவில்லாத, ஜனங்களின் வாழ்க்கையில் நேர்ந்த சம்பவங்களை வெளிப்படையாக உரைத்தல் போன்றவை. அவை மனோதத்துவ முறையைக் கொண்டு ஒருவருடைய சிந்தனையில் உள்ளவைகளை அறிந்து கொள்ளுதல் (Mind reading) என்பது கிடையாது. அவர் ஒரு தரிசனத்தைக் காண்பார் - அவை அவருடைய கண்களுக்கு முன்பாக அந்தப்படியே தோன்றும் (யோவான் 2:27). அவர் அபிஷேகத்தின் கீழ் உலகெங்கிலும் அவருக்கு முற்றும் அன்னியர்களாயிருந்தவர்களின் இரகசியங்களை பகுத்தறிந்து கூறின லட்சக்கணக்கான தடவைகளில் ஒரு முறை கூட அவை தவறுதலாகவில்லை. அவர் கூறினவை உண்மையாகவே இருந்தன (யாத். 18:21-22), சுகமாக்குதல், எதிர்கால சம்பவங்கள் இவைகளைக் குறித்து அவர் உரைத்த கோடிக்கணக்கான தீர்க்கதரிசனங்களில் ஒன்றாகிலும் சிறிதளவேனும் பிழையுள்ளதாகக் கூட காணப்படவில்லை. அவை உண்மையாக, 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்ற விதமாய் அமைந்திருந்தன. 
அடுத்த பத்து ஆண்டுகளில், சகோதரன் பிரான்ஹாம் ஏழு முறை உலகைச் சுற்றி வந்தார். வரலாறு காணாத பிரமாண்டமான கூட்டங்களை அவர் நடத்தினார். தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பன் (Durban) நகரத்தில், சுமார் 1,00,000 பேர் அவர் பிரசங்கத்தைக் கேட்டனர். கக்கதண்டம் (Crutches), சக்கர நாற்காலிகள் (Wheel Chairs) போன்றவைகளை சுக மளிக்கும் கூட்டங்கள் முடிந்த பின்னர் லாரிகளில் கொண்டுவந்து குவித்தனர். அங்கு சுகம் பெற்ற ஒருவன், பிறவி முதல் நிமிர்ந்து நிற்கக் கூடாதவனாய், கூனனாய், கால்களிலும் கைகளிலும் நடந்து சென்றிருந்த ஓர் ஏழை பிச்சைக்காரன். அவனை நாடு முழுவதிலும் எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் அவனுடைய வினோத உடலமைப்பு காரணமாக. அவனைப் பராமரித்தவர்கள் அவர் கழுத்தில் ஒரு பட்டையைக் கட்டி, அதில் சங்கிலியைத் தொங்கவிட்டு, ஒரு மிருகத்தைப் போல் அவனைத் தெருவில் நடனமாடச் செய்வது வழக்கம், அவன் நிமிர்ந்து நிற்பதை சகோதரன் பிரான்ஹாம் தரிசனத்தில் கண்டார். எனவே அவர், அவன் இயேசுவின் நாமத்தில் சுகமடைந்தால், இயேசு ஒருவரே மெய்யான தேவன் என்று ஜனங்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று சவால் விடுத்தார். சகோதரன் பிரான்ஹாம் ஜெபித்த மாத்திரத்தில் அவன் நிமிர்ந்து நின்றான். (லூக் 13:11-13 போன்று). அன்றிரவு கூட்டத்தில் 30,000 பேர் தங்கள் ஜீவியத்தை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தனர் என்பதில் வியப்பு ஏதாகிலும் உண்டோ ! 
ஒருமுறை தேவன், ஒரு சிறுவன் மரணத்திலிருந்து உயிரோடெழு வதைக் குறித்த தரிசனம் ஒன்றை சகோதரன் பிரான்ஹாமுக்குக் காண்பித்தார். அத்தரிசனத்தை சகோதரன் பிரான்ஹாம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அறிவித்து. அதில் கண்ட காட்சியை வர்ணித்து, அது “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதால் அதை எழுதி வைத்துக் கொள்ளும்படி ஆலோசனை கூறினார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் பின்லாந்துக்கு சுவிசேஷக் கூட்டங்களுக்காகச் சென்றிருந்தபோது, மலைகளில் ஒரு கார் விபத்து நேர்ந்திருப்பதையும், ஒரு சிறுவன் அவ்விபத்தில் அரை மணி நேரத்துக்கு முன்பே மரித்தும்போய், நசுக்கப்பட்டு இரத்த வெள்ளத்திலே வீதியில் கிடைப்பதைக் கண்டார். தரிசனத்தில் அவர் கண்ட அதே சிறுவன் தான் அவன். அங்கு நின்று கொண்டிருந்த வர்களிடம் சகோதரன் பிரான்ஹாம், “இச்சிறுவன் இன்னும் ஐந்து நிமிடங்களில் உயிரோடெழுந்து காலூன்றி நிற்காவிடில் நீங்கள் என்னைக் கள்ளத் தீர்க்கதரிசியென அழைத்து பின்லாந்தை விட்டுத் துரத்திவிடலாம். அவன் உயிரோடெழுந்தால், உங்கள் ஜீவியத்தை நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு உரிமையாக்க வேண்டும்” என்றார். அவர் ஜெபம் செய்த போது, மரித்திருந்த சிறுவனுக்குள் உயிர் வந்தது (1 ராஜா.17:17-24; லூக்.7:11-16 போன்று). 
ஓரிகானிலுள்ள போர்ட்லாண்டு என்னுமிடத்தில் அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, பிசாசு பிடித்த பலசாலியான ஒருவன் மேடையினருகில் வந்து, சகோதரன் பிரான்ஹாமைப் போலியென்றும் - வஞ்சகன் என்றும் அழைத்து அவருடைய தேகத்திலுள்ள எலும்புகள் ஒவ்வொன்றையும் முறித்துவிடப் போவதாக பயமுறுத்தி னான். அவனுடைய பயமுறுத்தலை நிறைவேற்ற அவன் அருகாமையில் நெருங்கினபோது, சகோதரன் பிரான்ஹாம் மெல்லிய குரலில், “சாத்தானே, தேவனுடைய ஊழியக்காரனை நீ பழித்ததனால், நீ என் காலடியில் விழ இயேசுவின் நாமத்தில் கட்டளையிடுகிறேன்'' என்றார். வலிமை பொருந்திய அம்மனிதன் தட்டுத் தடுமாறி அவர் அருகாமையில் நெருங்க முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. அவன் அப்படியே தரையில் விழுந்து அங்கிருந்து தூக்கிச் செல்லப்பட்டான் (லூக். 11:18-20). 
இந்தியாவிலுள்ள பம்பாய் நகரில் சுமார் 4,00,000 பேர் சுவிசேஷத்தைக் கேட்க வந்தனர். அப்பொழுது குருடான பிச்சைக்காரன் ஒருவன் ஜெபத்திற்காக சகோதரன் பிரான்ஹாமிடம் கொண்டு வரப்பட்டான். இப் பிச்சைக்காரன் யாரென்றும், அவன் எங்கு வசிக்கிறான் என்றும், சூரியனை அவன் தெய்வமாக ஆராதிப்பதால், அவன் அதையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததன் விளைவாக குருடானான் என்றும் சகோதரன் பிரான்ஹாம் தரிசனத்தில் கண்டார். அங்கிருந்த அஞ்ஞான பூசாரிகள் ஒவ்வொருவரிடமும் அவர், ''உங்கள் தெய்வம் உண்மையான தேவனானால், இங்கு வந்து இம் மனிதனின் கண்களைத் திறவுங்கள் பார்க்கலாம். அப்பொழுது நாங்கள் சாஷ்டாங்கமாக விழுந்து உங்கள் தெய்வத்தைப் பணிந்து கொள்வோம்'' என்று சவால் விடுத்தனர். ஆனால் ஒருவரும் முன்வரவில்லை. அவர் தொடர்ந்து, “என் தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உண்மையான தேவனாயிருந்து இம் மனிதனின் கண்களைத் திறந்தாரானால், வல்லமையற்ற உங்கள் தெய்வங்களைப் புறக்கணித்து, இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களா?'' என்று வினவினார் (1 இராஜா18=39ல் போன்று) அவர்கள் இணங்கினார்கள். அவன் சுகம் பெறுவதை அவர் ஏற்கனவே தரிசனத்தில் கண்டார். அவர் கண்டதரிசனம் ஒவ்வொன்றும் பிழை யின்றி நிறைவேறி வந்தன. இதுவே தீர்க்கதரிசியின் அச்சமற்ற நம்பிக்கைக்குக் காரணம். அந்த பிச்சை கேட்பவனின் கண்கள் திறந்த போது, அங்கு குழப்பம் ஏற்பட்டு, சுகம் பெறுவதற்காக சகோதரன் பிரான்ஹாமைத் தொடவேண்டுமென்று எண்ணி, அந்த ஜனக்கூட்டம் தள்ளிக்கொண்டு முன்வந்தது. 
மெக்சிகோவில் ஒரு பெண்ணின் எளிய விசுவாசம் தேவன் ஒரு மகத்தான அற்புதத்தைச் செய்யக் காரணமாயிருந்தது. அங்குள்ள வைத்தியர் ஒருவர், அந்த பெண்ணின் குழந்தை காலை 9.00 மணியளவில் நிமோனியா வியாதியால் மரித்து விட்டதாக ஆணைபத்திரம் ஒன்றை எழுதிக் கொடுத்திருந்தனர். ஆனால் அதற்கு முந்தைய இரவு நடைபெற்ற சகோதரன் பிரான்ஹாமின் கூட்டமொன்றில், ஒரு குருடனுக்கு தேவன் பார்வையளித்ததை அவள் கண்கூடாகக் கண்டாள். எனவே, சகோதரன் பிரான்ஹாமை அவள் அடைந்தால், தேவன் அவள் குழந்தையை உயி ரோடெழுப்புவார் என்னும் உறுதியான விசுவாசத்துடன், மரித்துப் போன அவள் குழந்தையை நாள் முழுவதும் கையிலேந்தி இங்குமங்கும் நடந்துக் கொண்டிருந்தாள். அன்றிரவு அக்குழந்தை உயிருடனிருப்பதை சகோதரன் பிரான்ஹாம் தரிசனத்தில் கண்டார். அக்குழந்தை அவ ரிடத்தில் கொண்டுவரப்பட்டது. அவர் இயேசுவின் நாமத்தில் ஜெபம் செய்தார், உடனே அது எழுந்து அழ ஆரம்பித்தது. 
ஒரு சமயம் சகோதரன் பிரான்ஹாம், தன் பிரசங்கத்தை சடுதியாக நிறுத்திவிட்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு மனிதனைப் பார்த்து, “ஐயா, சுகம் பெறுவதற்கேற்ற விசுவாசம் உங்களிடம் இருப்பதை நான் உணர்கிறேன், எழுந்து நடவுங்கள்'' என்றார் (அப். 3:2-10 போன்று). 60 ஆண்டுகட்கு மேலாக சக்கர நாற்காலியில் தமது வாழ் நாளைக் கழித்த உப்ஷா (Upshaw) என்னும் பெயர் கொண்ட அந்த காங்கிரஸ்காரர் எழுந்து, இயேசு கிறிஸ்துவை துதித்துக் கொண்டு அவர் வாஷிங்டனுக்குத் திரும்பி சென்று, சகோதரன் பிரான்ஹாம் இருபதாம் நூற்றாண்டின் தேவனுடைய தீர்க்கதரிசி என்றும் எங்கும் அறிக்கையிட்டார். இவ்வாறு அறிக்கையிடுவதில் அவர் சற்றேனும் வெட்கம் கொள்ளவில்லை. 
தேவன் தம்முடைய ஊழியக்காரனை உறுதிப்படுத்துவதற்கென செய்த சில அற்புதங்கள் இவை. இவை மிகவும் பிரபலமான அற்புதங்கள். லட்சக்கணக்கான நேரங்களிலும் நமது சந்ததியில், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று உரைக்கப்பட்டவை அனைத்தும் பிழையின்றி நிறை வேறின, இவைகள் அனைத்தையும் எழுதுவதற்கு பக்கங்கள் போதாது. “நான் பேசும் வார்த்தைகள் சத்தியமாயிருந்தபோதிலும், நீங்கள் என்னை விசுவாசிப்பதில்லை. நான் செய்யும் கிரியைகளினிமித்தமாவது என்னை விசுவாசியுங்கள். ஏனெனில் அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன'' என்று இயேசு கூறினாரல்லவா? (யோவான் 10:37-38, 5:36, 10:25, 12:37-40, 15:10-12, 15:24; லூக். 7:19-23). 
ஒவ்வொரு தேவனுடைய தீர்க்கதரிசிக்கும் இது பொருந்துகிறதாயிருக்கிறது. இது வில்லியம் பிரான்ஹாமுக்கும் பொருந்துகின்றதல்லவா? அவர் தேவனால் அனுப்பப்படவேண்டிய தீர்க்கதரிசியாக விளங்கினார். "ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால்... இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான்'' (யோவான் 3:2). ஒருக்கால் வில்லியம் பிரான்ஹாம் புறஜாதிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த கடைசி காலத் தீர்க்கதரிசியாய் இராவிட்டால்! அத்தீர்க்கதரிசி தோன்றும்போது, “இவர் செய்கிற அற்புதங்களைப் பார்க் கிலும் அதிகம் செய்வாரோ?” (யோவான் 7:31). நிச்சயமாக. “அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால், ஒன்றும் செய்ய மாட்டார்” (யோவான் 9:33). 
அப்படியிருக்க, ஏன் வில்லியம் பிரான்ஹாம் இன்று அனேகரால் அங்கீகரிக்கப்படுவதில்லை? எந்த ஒரு உண்மையான தீர்க்கதரிசியும் அவன் காலத்தில் பெரும்பான்மையோரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, ஒரு உண்மையான தீர்க்கதரிசி சீர்கேட்டை கடிந்துகொள்ளவேண்டும். ஆனால் ஜனங்களோ தங்கள் வழிகளை மாற்றிக் கொள்ள விரும்புவது கிடையாது. விளைவு என்னவாய் இருந்தபோதிலும், அவன் சத்தியத் தையே உரைக்கவேண்டும். கவனியுங்கள்; இயேசுகிறிஸ்து (அவர் தேவன்=தீர்க்கதரிசியாய் இருந்தார்) பிணியாளிகளைச் சுகப்படுத்தின வரைக்கும் திரளான ஜனங்கள் அவரிடம் வந்தனர். ஆனால் அவர் திடமான போதகங்களை உபதேசிக்கத் தொடங்கினபோது, ''அது முதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனே கூட நடவாமல் பின் வாங்கி போனார்கள்'' என்று வேதம் உரைக்கின்றது (யோவான் 6:48-68). அவ்வாறே, பிணியாளிகளையும் அவதியுறுகிறவர்களையும் சுகப்படுத்த தேவன் சகோதரன் பிரான்ஹாமை உபயோகித்த வரைக்கும் லட்சக் கணக்கானோர் அவருடைய ஊழியத்தில் பின்தொடர்ந்து வந்தனர் ஆனால் தேவன் தீர்க்கதரிசியின் மூலம் தமது வார்த்தையை மறுபடியும் புதுப்பிக்கத் தொடங்கின போது, அநேகர் அற்புதங்களை விரும்பினர்; ஆனால் தேவனுடைய வார்த்தையையோ அவர்கள் வெறுத்தனர். என்னவாயினும், இயேசு கிறிஸ்து தமது மணவாட்டியை எடுத்துக் கொள்வதற்கு முன்பு வார்த்தையைப் புதுப்பிக்கவேண்டும். ஏனெனில் அவள் தூய வார்த்தை மணவாட்டியாய் இருத்தல் அவசியம். தேவ னுடைய வார்த்தையின் உண்மையான அர்த்தம் நூற்றாண்டுகளாக தாறுமாறாக்கப்பட்டு, இயேசு கூறினது போன்று, இன்று, “மனுஷ னுடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் ... உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள்” (மாற். 7:6,7,13). 
1962ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதியன்று சகோதரன் பிரான்ஹாம் ஒரு தரிசனம் கண்டார். அத்தரிசனத்தில் அவர் அரிசோனாவிலுள்ள டூசான் என்னும் இடத்தின் அருகே நின்று கொண்டு, கால் சட்டையிலும் ஒட்டிக் கொண்டிருந்த ஊமுள் ஒன்றை அகற்ற முயன்றார். அவ்வமயம் ஒரு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இத்தரிசனத்தைக் குறித்து அவர் டிசம்பர் 31ம் தேதியன்று இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன் வில் பட்டினத்திலுள்ள தமது சபையோரிடம் கூறினார் (அவர் அன்றளித்த செய்தி ஒலிப்பதிவாகியுள்ளது), பின்பு அவர் டூசானுக்கு மாறினார். ஒரு மாதம் கழித்து, 1963ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 28ம் தேதியன்று அவர் வேட்டையாடச் சென்றிருந்தபோது, உண்மையில் ஒரு ஊமுள் அவர் கால் சட்டையில் ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அதை அகற்ற அவர் குனிந்தபோது, அதிபயங்கர வெடிசத்தம் ஒன்றுண்டாகி, மலைப்பாங்கான அப்பாகத்தை வெகுவாக அசைத்தது. அவர் அண்ணாந்து பார்த்தபோது, ஏழு தேவ தூதர்கள் கூர்நுனிக்கோபுர வடிவில் வேகமாக அவரை நோக்கி இறங்கி வருவதைக் கண்டார். சற்று நேரம் அவர்கள் மத்தியில் அவர் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார். ஒரு சத்தம்: அவரிடம், “கிழக்கே செல்” என்று விளம்பினது. வெளிப்படுத்தின விசேஷத்தில் காணப்படும் ஏழு முத்திரைகளைத் திறக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை சகோதரன் பிரான்ஹாம் அறிந்து கொண்டார். (தானி. 21:4,8-9; வெளி 5ம் அதிகாரம், 6ம் அதிகாரம் முதல் 8:1முடிய). அத்தூதர்கள் ஆகாயத்திற்குத் திரும்பிச் செல்லும்போது, 50 மைல் நீளம் 30 மைல் அகலமுள்ள ஒரு மேகத்தை உருவாக்கிச் சென்றனர். அது நூற்றுக்கணக்கான மைல்கள் சுற்றிலும் காணப்பட்டது (லூக். 21: 25-28). இந்த விசித்திர மேகத்தின் புகைப்படங்கள் அநேகம் எடுக்கப்பட்டன. அவைகளில் சில ஃலைப் பத்திரிக்கையின் 1963ம் ஆண்டு மே 17ம் தேதியின் வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டன. வேறு சில, “விஞ்ஞானம்” என்னும் பத்திரிக்கையின் 1963ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதியின் வெளியீட்டில் வெளியிடப்பட்டன. அத்தகைய மேகம் தோன்றுவது விஞ்ஞான ரீதியாக கூடாத காரியம் என்னும் விஞ்ஞானி ஒருவரின் அறிக்கையும் அதனுடன் வெளியிடப் பட்டிருந்தது. மேகங்கள் 10 மைல் உயரத்திற்கு மேல் உண்டாக முடியாது. ஆனால் இந்த அதிசய மேகமோ 26 மைல் உயரத்தில் தோன்றினது அவ்வளவு உயரத்தில் நீர்த்துளிகள் கிடையாது. 
சகோதரன் பிரான்ஹாம் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லுக்குத் திரும்பவந்து 7 நாட்கள் தேவனுடைய சமுகத்தில் காத்திருந்தார். அப்பொழுது தேவனுடைய சத்தம் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து அவ ருடன் பேசி வெளிப்படுத்தின விசேஷம் 5 முதல் 8 வரையிலுள்ள அதிகாரங்களில் மறைந்து கிடந்த இரகசியங்களின் சரியான அர்த்தத்தை வெளிப்படுத்திக் கொடுத்தது. அந்த வெளிப்பாடு, சகோதரன் பிரான்ஹாம் உட்பட மற்றுமுள்ளோர் யாவரும் அதுவரை கருதியிருந்தவைகளுக்கு முரணாக அமைந்திருந்தது. ஆயினும் அது தேவனுடைய வார்த்தையுடன் பிழையின்றி பொருந்தினது. இந்த ஏழு முத்திரைகளின் பேரில் சகோதரன் பிரான்ஹாம் ஏழு இரவுகள் தொடர்ச்சியாக பிரசங்கம் செய்தார் (மார்ச்சு 17-24, 1963). அவர் அப்பொழுது நிகழ்த்திய பிரசங்கங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அதன் மூலம், “ஆனாலும் தேவன் தம் முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்'' (வெளி. 10:6) என்னும் வேதவாக்கியம் நிறைவேறியது. 
சகோதரன் பிரான்ஹாம் 1965ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடிபோதையிலிருந்த ஒருவனால் நேர்ந்த விபத்தில் மரித்தார். (யோவான் 3:28 - 30). ஆனால் அவரை உபயோகித்து தேவனளித்த செய்தியோ மரிக்க முடியாது. சகோதரன் பிரான்ஹாமின் ஆயிரத்திற்கும் மேலான வெவ்வேறு பொருளின் பேரிலுள்ள பிரசங்கங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, அவை உலகெங்கும் சுற்றி, மாறுபாட்டிற்கு விரோதமாக கூக்குரலிட்டு, இயேசுகிறிஸ்து வெகு விரைவில் வரப்போகின்றார் என்று ஆத்துமாக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு சத்தியத்தை விரித்துரைத்து, இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகின்றன...... அது ஏழாம் தூதனின் சத்தமாகும். 
இவை யாவும் ஒரு மனிதனை உயர்த்துவதாக எண்ண வேண்டாம். கிறிஸ்து மாத்திரமே உயர்த்தப்படுகின்றார்! சகோதரன் பிரான்ஹாம் தானாக ஒன்றுமே செய்திருக்க முடியாது (யோவான் 3:27). இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மாமிசத்தில் நடந்த போது செய்த அதே கிரியைகளை இந்த தாழ்மையுள்ள தீர்க்கதரிசியின் மூலம் மறுபடியும் நடப்பித் தார் (எபி.13:8). எனவே நீங்கள் மனிதனைப் பாராதேயுங்கள், அவர் கொண்டு வந்த செய்தியை மாத்திரம் கவனியுங்கள். ஏனெனில் அச்செய்தி, ஸ்தாபனங்களின் பிரமாணங்களுக்கும், பாரம்பரியங்களுக்கும் அப்பாற்பட்ட தூய்மையான இயேசுகிறிஸ்துவினிடம் உங்களை வழிநடத்தும். “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுபவர்களாயிருங்கள்” என்று பவுல் அப்போஸ்தலன் கூறினாரல்லவா? (1கொரி. 11:1, 4:6). நீங்கள் பவுலுக்குக் கீழ்ப்படியும்போது, ஒரு மனிதனைப் பின்பற்றுபவர்களா யிராமல், அவர் மூலம் பேசின பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப் படிகின்றீர்கள். ஒருவர் இவ்விதம் எழுதியுள்ளார்: “இந்த மனிதன், வில்லியம் பிரான்ஹாம், தேவனிடமிருந்து நூற்றுக்கணக்கான உறுதிப்படுத்தல்களைப் பெற்று அவைகளை அற்புதங்களாக வெளிப்படுத்தினார். அது மட்டுமின்றி தீர்க்கதரிசியின் உத்தியோகத்திற்கேற்ற மற் றெல்லா அம்சங்களும் அவர் வாழ்க்கையில் காணப்பட்டன. எனவே அவர் யாரென்பதைப் பொறுத்து அவரை ஏற்றுக் கொள்ளுதல் அவசியம். “ஆம். அவர் யாரென்பதைப் பொறுத்து அவரை ஏற்றுக் கொள்ளுதல் அவசியம். அவருடைய உதடுகளின் மூலம், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று பரிசுத்த ஆவியானவர் கூறினவைகளுக்கும், பவுலின் மூலம் அவர் “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று உரைத்தவை களுக்குமிடையே எவ்வித வேறுபாடுமில்லை. ஏனெனில் அதே பரிசுத்த ஆவியானவர் இவ்விருவரின் மூலம் கிரியை செய்தார். 
பவுலின் காலத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால், பவுலை அடையாளம் கண்டு கொண்டிருப்பீர்களா? அல்லது நோவா, எலியா, எரேமியா இவர்களின் காலத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால், அவர்களைத் தீர்க்கதரிசிகளாக அங்கீகரித்து அவர்களுடைய செய்திக்கு செவி கொடுத்திருப்பீர்களா? பாலஸ்தீனாவில் ஒரு தூரமான பாகத்தில் நீங்கள் வாழ்ந்திருந்து, இயேசு என்னும் பெயர் கொண்ட ஒருவர் மகத்தான அற்புதங்களைச் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டால் என்ன செய்திருப்பீர்கள்? அவர் யாரென்பதைப் பொறுத்து அவரை அப்பொழுது அடையாளம் கண்டு கொண்டிருப்பீர்களா? அல்லது, முந்தைய காலங்களில் தேவன் செய்ததை விசுவாசித்து, அவர்களுடைய நாட்களில் அவர் செய்து வந்ததை அங்கீகரியாமற்போன பரிசேயர்களைப் போல் நீங்களும் இருப்பீர்களா? “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து, எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்க மாட்டோம் என்கிறீர்கள். ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்கிறவர்களுக்கு புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களை குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்” (மத். 23:29-31) என்று இயேசு அறைகூவினார். 
தேவன் இந்த கடைசி சந்ததியாரை ஒரே மகத்தான தீர்க்கதரிசியின் மூலம் சந்தித்து விட்டார். அந்த தீர்க்கதரிசி தாழ்மையுள்ளவராய், பொருளையும் புகழையும் விரும்பாமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும் அளிக்க சற்றேனும் தவறாதவராய் வாழ்ந்தார். 
அவருடைய வாழ்க்கையை நான் சுருக்கமாக சித்தரித்தேன். தேவன் அவரை அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிப்படுத்தி நிரூபித்ததை நான் சுருக்கமாக விவரித்தேன். இவையிரண்டும் வேத வாக்கியங்களுடன் பொருந்துகின்றன (மல் 3:6) என்பதையும் நான் காண்பித்தேன். இவையனைத்தையும் நான் சுருக்கமாகவே கூறினேன். ஆயினும் அவர் கொண்டு வந்த செய்தியைக் குறித்து நான் ஒன்றுமே கூறவில்லை. அவரளித்த செய்திதான் மிக முக்கியம் வாய்ந்தது. இனி அது உங்களது பொறுப்பு. அவருடைய செய்திகளடங்கிய புத்தகங்களும் ஒலிநாடாக்களும் உள்ளன. எனவே நீங்கள் பரிசோதித்து, அத்தாட்சிகளைக் கூர்ந்து கவனித்து, தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து பார்த்து ஜெபிக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். இது சத்தியம் என்று நீங்கள் தீர்மானித்தால் அதை விசுவாசியுங்கள். 
கடைசி காலத் தீர்க்கதரிசி இவ்வுலகில் வந்து போய் விட்டதால், காலம் எவ்வளவு தாமதமாகிவிட்டது! கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக நிகழ வேண்டிய ஏழு முக்கியமான சம்பவங்களை தேவன் 1933ம் ஆண்டில் சகோதரன் பிரான்ஹாமுக்குத் தொடர்ச்சியாக தரிசனத்தில் காண்பித்தார். அவைகளைச் சுருக்கமாக இங்கு கூறுகிறேன். 
1) முதலில் அவர் இத்தாலியா நாட்டின் சர்வாதிகாரியான முசோலினியைக் கண்டார். அவன் எத்தியோப்பியாவைக் கைப்பற்றுவான் என்றும், முடிவில் அவனுடைய சொந்த ஜனங்களே அவனைப் புறக்கணித்து, அவமானமான முடிவையடைவான் என்றும் அத்தரிசனம் உரைத்தது. 
2) அடுத்ததாக அவர் அடால்ஃப் ஹிட்லர் என்னும் பெயர் கொண்ட ஆஸ்திரியா நாட்டு வாலிபன் ஒருவனை தரிசனத்தில் கண்டார். அவன் ஜெர்மனி நாட்டில் ஆதிக்கம் பெற்று, உலகத்தை மகாயுத்தத்திற்குக் கொண்டு செல்வானென்றும், ஆனால் ஜெர்மனி தோல்வியடைந்து ஹிட்லர் மர்மமான முடிவையடைவான் என்னும் அத்தரிசனம் உரைத்தது. 
3) மூன்றாவதாக தோன்றின தரிசனத்தில், மூன்று பெரிய கொள்கைகள் - பாசிசம், நாசிசம், கம்யூனிசம் என்பவை - உலகில் தலையெடுப்பதை அவர் கண்டார். ஆனால் கம்யூனிசம் மற்ற இரு கொள்கைகளையும் விழுங்கி விடுமென்பதையும் அத்தரிசனம் உரைத்தது. 
4) நான்காம் தரிசனத்தில், இரண்டாம் உலக மகாயுத்தத்திற்குப் பின்பு விஞ்ஞானத்தில் ஏற்பட்ட பிரமாண்டமான முன்னேற்றத்தை அவர் கண்டார். 
5) ஐந்தாம் தரிசனத்தில், உலகத்தில் நல்நடத்தை குன்றிப் போவதை அவர் கண்டார். அது முற்றிலும் ஸ்திரீகளையே சார்ந்திருந்தது, பெண்கள் மயிரை கத்தரித்துக் கொள்ளுதலையும், புகை பிடித்து, மது அருந்தி ஆண்களின் உடைகளை அணிந்துகொண்டிருப்பதையும் அவர் கண்டார். (இவ்வைந்து சம்பவங்களும் 1933ம் ஆண்டிலேயே, அதாவது இவை நிறைவேறுவதற்கு அனேக ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்குக் காண்பிக்கப்பட்டன என்பதை நினைவில் கொள்ளவும்). 
6) ஆறாம் தரிசனத்தில், ஒரு அழகான ஆனால் கொடூரமான ஸ்திரீ அமெரிக்காவில் எழும்பி, அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதை அவர் கண்டார். (இது ஒருக்கால் ரோமன் கத்தோலிக்க சபையைக் குறிக்கலாம் என்று சகோதரன் பிரான்ஹாம் கருதினார். ஆனால் அவர் திட்டவட்டமாக ஒன்றும் கூறவில்லை). 
7) கடைசியாக தோன்றின தரிசனத்தில், ஒரு பயங்கர வெடி சத்தத்தை அவர் கேட்டார். அவர் திரும்பிப் பார்த்த போது, அமெரிக்கா எரிந்து அழிந்து போய், புகைக்காடாய் இருப்பதைக் கண்டார். கண்கள் காணும் தூரம் வரைக்கும் எந்த உயிரினமும் காணப்படவில்லை. அங்கே ஆழமான குழிகளும் புகைந்து கொண்டிருக்கும் இடிந்த குவியல்கள் (debris) மாத்திரமே காணப்பட்டன. அதன் பின்பு தரிசனம் மறைந்து போயிற்று. 
சகோதரன் பிரான்ஹாம், “நண்பர்களே. நாம் முடிவுக்கு வந்து விட்டோம். விரைவில் சமயம் கடந்து செல்லும். லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள். இப்பொழுது இரட்சிக்கப்பட்டதாய் கருதியுள்ள லட்சக்கணக்கானோர் அணுசக்தி காலத்தில் அக்கினிக்கு இரையாவார்கள். நாம் கடைசி நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிருபையினாலும், அவருடைய ஒத்தாசையினாலும் அவருடைய ஜனங்கள் வெகுவிரைவில் பிரத்தியட்சமாகவிருக்கும் இயேசுகிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கியிருக்க வேண்டுமென்று என்னால் அவர்களிடம் கூற முடிந்தது. “சகோதரன் பிரான்ஹாமே, அவர் வர எவ்வளவு காலம் செல்லும்? என்று நீங்கள் கேட்கலாம், ஒருக்கால் இருபது ஆண்டுகள் செல்லலாம். அல்லது ஐம்பது ஆண்டுகள் அல்லது நூறு ஆண்டுகள் - எனக்குத் தெரியாது. ஒருக்கால் இன்று காலை அவர் வரலாம். அல்லது இன்றிரவு வரலாம் - எனக்குத் தெரியாது. எனவே நீங்கள் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று, நான் கர்த்தரின் நாமத்தினால் பேசுகிறேன் என்பதை நினைவு கூருதலேயாம். ஆயத்தமாயிருங்கள், எந்த நேரத்தில் என்ன சம்பவிக்குமென்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் தாமதமாகி விட்டது. 
உண்மையாக, நாம் விளையாடிக் கொண்டிருக்க இது நேரமில்லை. நாம் மிகவும் கருத்துள்ளவர்களாய் இருக்க வேண்டும். இல்லையேல் நாம் மரிக்க நேரிடும் (லூக். 11:31-32). சகோதரன் பிரான்ஹாம், “தேவன் சபிக்கப்பட்ட இவ்வுலகை தகர்த்து அதை அசைக்கப்போகிறார்... அந்த அதிர்ச்சியை தாங்குவதற்கு ஒரே ஒரு இடம் தான் உண்டு. அது தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மந்தைக்குள் வருதலேயாம். தேவனுடைய இரக்கங்கள் நமக்குக் கிடைக்கப்பெறும் இச்சமயத்திலேயே, உங்கள் முழு ஜீவியத்தையும் எவ்வித தங்கு தடையுமின்றி அவருக்கு அர்ப்பணிக்க உங்களை வேண்டிக் கொள்கிறேன். அவரே உண்மையுள்ள மேய்ப்பனாக உங்களை காத்து, பராமரித்து, தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்துவார்” என்று கூறியிருக்கிறார். 
இவ்விரண்டு கைப்பிரதிகளும் O.A. ஜார்கென்ஸன் என்பவரால் எழுதப்பட்டவை. தமிழாக்கம்: S.C. ஜேக்கப்